Monday, 4 May 2026

இருக்கிறது

உன் இருப்பிடத்தின் கொல்லைபுரத்தில்
கொக்கறிக்கிறது கடல் , 
தன் இருப்பை பற்றிய பெருமிதம் அதற்கு.
மேஜை டிராயரை அடிக்கடி திறந்து
ஒரு ரகசிய பொருளின் இருப்பை
மீண்டும் மீண்டும் உறுதி செய்துகொள்கிறேன்
இப்படி செய்வது ஒரு மனநோயின்
அறிகுறி என்கிறார்கள் ,
அவர்கள் கிடக்கட்டும் நீ அறிவாய் 
தானே , ஒவ்வொரு முறையும்
"இருக்கிறது" என்று உறுதிசெய்த பின்
விடும் பெருமூச்சின் உஷ்ணத்தை.

Monday, 26 January 2026

பேருண்மையின் விழிகள்

பேருண்மையின் விழிகள் எப்போதும்
திறந்தேயிருக்கின்றன 
சிறிய பொய்களை பட்டப்பகலில்
மரத்திலிருந்து பறித்து உண்கிறோம்
அதன் தர்க்கங்களை மீண்டும்
மீண்டும் ஒரு மந்திரம் போல் 
ஜெபித்துக்கொண்டே இருக்கிறோம்,
சிரிக்கிறோம் , அழுகிறோம் , வாழ்கிறோம்
காலத்தின் மீதேறி வெகு தூரம் செல்கிறோம் , எனினும்
பேருண்மையின் விழிகள் எப்போதும்
திறந்தே தான் இருக்கின்றன. 
                                                                 - ik

Wednesday, 29 October 2025

என்னைத் தேடினாயா?

என்னைத் தேடினாயா?

தோட்டத்தில் ஊர்ந்து சென்ற
நத்தையின் ஓட்டுக்குள்,
பச்சை முட்களால் சூழ்ந்த
எலுமிச்சை மரத்தில் குருவி
கட்டியிருந்த கூட்டுக்குள்,
சுவற்றுக்கும் அலமாரிக்கும்
இடைப்பட்ட சந்திற்குள்,
என் நினைப்பிற்கும் அது
மற்றொன்றாய் மருவிய
இடைப்பட்ட காலத்திற்குள்
தான் இருந்தேன்.