Friday, 30 October 2026

heal


உன் உடலின் வேதனையுற்ற
இடங்கள் தேவதாரு பூக்களால்
மலரட்டும்
தேய்மானங்களால் வலுவிழந்த
உன் எலும்புகள் இரும்புத்
தாதால் நிரம்பட்டும்
வீரியமிழந்த உனது நரம்புகளில்
எரி சாராயம் வேகம்கொண்டு
ஓடட்டும் 
நீ தொடும் இடம் யாவும் துலங்கட்டும்
நீ இடும் மூச்சில் குளிர் பரவட்டும்
உன் காயங்கள் ஆறட்டும்
உன் காயங்கள் ஆறட்டும்.







Sunday, 25 October 2026

அதே கடற்கரையில்


ஒரு பெரும் மழைக்குள்
ஊடுருவி நகர்கிறேன்
நிற்பவை நடப்பது போன்றும்
நடப்பவை நிற்பது போன்றும்
பிரம்மைகள்
முதல் சில தீண்டல்களில் தான்
சலசலப்பு
முழுதும் நனைந்த பின் 
நானே மழையாகி விட்டேன்,
இப்போது நான் செல்கிறேன்
நாம் நின்ற அதே கடற்கரைக்கு
அதே மண் சரிவில் 
அதே அலைகளைக் காண
நானாக அல்ல 
ஒரு பெரும் மழையாய்.

Wednesday, 21 October 2026

பூனைக்கு நன்றி


நிரந்தரமான ஒன்றின் மீது
நாம் ஒருபோதும் பந்தயம்
கட்டவில்லை , 
எந்த நேரமும் உடைந்து
சிதறிவிடும் கண்ணாடி 
குடுவைக்குள் தான் நம் 
ரகசியங்களை ஒளித்து வைத்தோம்
நாம் ஒருவரை ஒருவர் 
வந்து சேரும் வழித்தடத்தை
யானைக் கூட்டமொன்று 
சிதைத்துவிட்டது , இப்போது
நீ கடற்கரையிலும் , நான்
பாலையிலும் 
தேடிக் கொண்டிருக்கிறோம்
காலடி தடங்களை,
ரகசியங்களின் கண்ணாடி குடுவை 
கீழே வீழ்ந்திடாமல் காத்துக் கொண்டிருக்கும் 
நமது பூனைக்கு நன்றி
சொல்லியாகவேண்டும்.

Monday, 5 October 2026

வலியின் உட்புறம்


கைக்கு அடங்கிய அரையடி
ஜன்னல் வழியாக உன் 
மூடிய கதவுகளை வெறித்து
பார்த்துக்கொண்டே இருக்கிறேன்,
என் உப்பரிகையிலிருந்து
உனக்கான செய்திகளை எடுத்து
சென்ற பறவைகளும் வானம்
துறந்து விட்டன,
தலை நீத்த புத்தன் கண்ட 
கடைசி கனவுக்குள் நீ அகப்பட்டிருக்க
வேண்டும் என்று என்னையே 
நான் தேற்றிக் கொள்கிறேன்.

Tuesday, 29 September 2026

கத்தி

ஒரு மடக்கு கத்தி
எப்போதும் ஆயத்தமாய்
என் கால் சட்டைப்பையில் இருக்கிறது
இனி என்னை வேறு யாரும்
காயப்படுத்திட முடியாது .

Friday, 25 September 2026

காகிதப்பூ


நீரில் மிதக்கும் உருண்டை
உணவுகளை ஓரங்களில் மட்டும்
கொறித்து கொஞ்சம் கொஞ்சமாக
உண்ணும் மீன்களை போல
மூளையை தின்கிறது மறதி
போராட்டங்கள் ஓய்ந்து , இப்போது
மன்றாடி தக்கவைத்து 
கொண்டிருக்கிறேன் உனது 
நினைவுகளை.
வாசனையேயற்ற காகித பூக்களால்
நிறைந்த தோட்டத்தில் நிற்கிறேன்,
உலகின் கடைசி விருந்தை எங்கோ 
சமைக்கிறார்கள் அதன் வாசம்
வரும் திசை நோக்கி நடக்கிறேன்,
நீ அங்கு இருப்பாய் தானே?
I.k

Tuesday, 22 September 2026

தேடல்


இந்த உலகின் பெரும்
தத்துவ விசாரங்களில் , 
அபத்தமான அரட்டைகளில் ,
ஆகச்சிறந்த கவிதைகளில்,
அர்த்தமற்ற பிதற்றல்களில்,
அடர்த்தியான மௌனங்களில் ,
ஆக்ரோஷமான அலைகளில்,
பகலில், இரவில் ,
பறவைகள் தஞ்சம் அடையும் 
கூட்டில் , பல்வேறு பருவங்களிலும்
உன்னை நித்தம் தேடிக்கொண்டே
இருப்பேன்.
Ik

Monday, 21 September 2026

இறந்து வீழும் விண்மீன்கள்

பின்னிரவு வானில் வீழும்
நட்சத்திரங்களை கை நீட்டி 
உனக்கு அடையாளம் 
காட்டி கொடுப்பது போல் கனவுகள்
காண்கிறேன்
அறுந்த சிதறிய ஜெப மாலையின் 
வெள்ளி மணி சிந்தனைகளிலிருந்து
உன்னை பொறுக்கி
எடுக்கிறேன், அவற்றை
மாத்திரைகள் எடுக்கப்பட்டு வெறும் 
குழிகள் மட்டுமே எஞ்சியிருக்கும்
மருந்து அட்டைகளில் 
பத்திர படுத்துகிறேன்.
எனக்கே உரிய அபத்தமான வழிகளிலும்
அர்த்தமற்ற மொழிகளிலும் 
உன் இருப்பின் சூட்டை தக்கவைத்து
கொள்கிறேன்.

Monday, 4 May 2026

இருக்கிறது

உன் இருப்பிடத்தின் கொல்லைபுரத்தில்
கொக்கறிக்கிறது கடல் , 
தன் இருப்பை பற்றிய பெருமிதம் அதற்கு.
மேஜை டிராயரை அடிக்கடி திறந்து
ஒரு ரகசிய பொருளின் இருப்பை
மீண்டும் மீண்டும் உறுதி செய்துகொள்கிறேன்
இப்படி செய்வது ஒரு மனநோயின்
அறிகுறி என்கிறார்கள் ,
அவர்கள் கிடக்கட்டும் நீ அறிவாய் 
தானே , ஒவ்வொரு முறையும்
"இருக்கிறது" என்று உறுதிசெய்த பின்
விடும் பெருமூச்சின் உஷ்ணத்தை.

Monday, 26 January 2026

பேருண்மையின் விழிகள்

பேருண்மையின் விழிகள் எப்போதும்
திறந்தேயிருக்கின்றன 
சிறிய பொய்களை பட்டப்பகலில்
மரத்திலிருந்து பறித்து உண்கிறோம்
அதன் தர்க்கங்களை மீண்டும்
மீண்டும் ஒரு மந்திரம் போல் 
ஜெபித்துக்கொண்டே இருக்கிறோம்,
சிரிக்கிறோம் , அழுகிறோம் , வாழ்கிறோம்
காலத்தின் மீதேறி வெகு தூரம் செல்கிறோம் , எனினும்
பேருண்மையின் விழிகள் எப்போதும்
திறந்தே தான் இருக்கின்றன. 
                                                                 - ik